பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 பன்னிரு திருமுறை வரலாறு

மகிழ்தற்கேற்ற வகையில் மைந்தன் உயிர்பெற்றெழுந்த தனை முற்கூறினர். அரச குமாரன் உயிர் நீத்தது காலத் தாற் பிற்பட்ட நிகழ்ச்சியாயினும், அது மந்திரி உயிர் நீத்ததற்குக் காரணமாய் முன்னின்ற தென்க. ஆன் கன்றும் அரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உயிர்பெற்றெழுதலாகிய இந்நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் ஒருசேர நிகழ்ந்தனவாயினும் காரணகாரிய இயைபுபற்றி வரிசைப்படுத்துக் கூறினர்.

"மடி சுரந்து பொழி தீம்பால், வரும் கன்று மகிழ்ந்து உண்டு

படிநனைய, அரும்பசுவும் பருவரல் நீங்கியது ” என்றது, நுண்ணுணர்வுடைய அருமை வாய்ந்த பசு, இறந்த கன்று உயிர்பெற் றெழுந்தமையா லுண்டாகிய பெரு மகிழ்ச்சியையும் தன் கன்றினிடத்தே கொண்ட பேரன் பினையும் இனிது புலப்படுத்துவதாகும்.

திருத்தொண்டர் புராணமாகிய இக்காப்பியத்தில் திருநகரச்சிறப்பு உரைக்கும் நிலையில் மனுச்சோழரது வரலாற்றினை ஆசிரியர் விரித்துரைத்தது ஏன் ? எனக் கற்போர்க்கு ஐயம் நிகழ்தல் இயல்பேயாகும். காப்பிய ஆசிரியர்கள் தாம் இயற்றும் காப்பியத்தில் காப்பியத் தலைவரது வாழ்க்கையினை வளம்படுத்தும் நிலையில் அமைந்த அவர் நாட்டு அரசியல் நெறிமுறையினை நகரச் சிறப்பினையொட்டி விரித்துக் கூறுதலை மரபாகக் கொண்டுள்ளார்கள். இம்மரபினைச். சீவகசிந்தாமணி, சூளாமணி, கம்பராமாயணம் போன்ற செந்தமிழ்க் காப்பியங்களிற் காணலாம். அறவாழியந்தணனுகிய இறை வனது திருவருள் வழிப்பட்ட அறநெறியினையே அரசியல் நெறியினும் மேலாகத் தமது வாழ்க்கைக்குரிய நல்லற நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் திருத்தொண்டத் தொகையிற் போற்றப் பெற்ற சிவனடியார்கள் ஆவர். அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை (7-87-2) நீதியுருவினராகக் கொண்டு எவ்வுயிர்க்கும் அருளுடைய ராய், அறநெறி வழுவாது திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் மனுச்சோழராதலின், இறை வனது திருவருளின்வழி நிகழும் அரசியல் நெறிமுறைக்கு வரம்பாக மனுச்சோழரது சரிதம் திருத்தொண்டர் வரலாறு கூறும் இப்புராணத்தின் தொடக்கத்தே திரு நகரச் சிறப்பில் விரித்துரைக்கப் பெறுவதாயிற்று.