பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா சுவாசிக்கத் தொடங்குகின்ற பெரிய முயற்சிக்குத் தான் அந்த அழுகை, அழத் தொடங்கிய உடனேயே நுரையீரல்கள் தங்களது பணியைத் தொடங்கி விடுகின்றன. சுவாசம் வந்து போய்க்கொண்டிருக்க ஆரம்பித்துவிடுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து வருவது இந்த மூச்சிழுக்கும் சுவாசமே அது தன்னிச்சையாக, தானாகவே நடக்கும் ஒரு செயலாகும். இரவும் பகலும் எந்த நேரத்திலும் தானாகவே இயங்கிக் கொண்டிருப்பது. அதனை நம் செயலால் கட்டுப்படுத்திசெயல்பட வைக்க முடியும் என்கிறது இந்த யோகமுறை உடற்பயிற்சிகள். மார்புக் கூட்டுப் பகுதியினுள்ளே, கடற் பஞ்சு போன்ற இரண்டு சுவாச உறுப்புக்கள் இருக்கின்றன. அவைகளின் பெயர்தான் நுரையீரல்கள். உள்ளே வருகின்ற காற்றிலிருந்து பிராணவாயுவை விரிந்து ஏற்றுக் கொண்டு, வேண்டாத கரியமிலவாயுவை இடைவிடாமல் சுருக்கி வெளியேற்றும் வேலையைத்தான் நுரையீரல்கள் செய்து வருகின்றன. பார்வைக்குச் சிறிதாகத் தோன்றும், அந்த இரண்டு நுரையீரல்களுக்குள்ளே 600 மில்லியன்களுக்கு அதிகமான காற்றுப் பைகள் போன்ற கண்ணறைகள் (Cells) இருக்கின்றன. அந்தக் கண்ணறைகளைத் தனித்தனியே எடுத்து, ஒரு சம தரையில் விரித்து வைத்தோமானால், அவைகள் இருக்கும் இடமானது நூற்றுக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேலிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, ஒரு டென்னிஸ் அடுகளத்தின் ஒரு பகுதி (Court) அளவு இருக்கும் என்பதும் ஒரு கணக்காகும்.