பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதன் முதலாக, தெய்வத்தன்மையுள்ள தேகத்தைத் திறம்படக்காக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1994 - ஆம் ஆண்டு "ஒட்டப் பந்தயம்” என்ற திரைப்படத்தை தயாரித்துத் திரையிட்டுள்ளார். முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளையாட்டு மற்றும் உடல் நலத்தின் மேன்மையை, கடந்த 30 ஆண்டுகளாக உலகுக்கு உணர்த்தினார். முதன் முதலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, தேக நலத்தின் தேவைகளை தெளிவுபடுத்தினார். விளையாட்டுத் துறை பற்றிய கருத்துக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக, நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்களில், கட்டுரை, கவிதைகளாக படைத்து மகிழ்ந்தார். முதன் முதலாக “உடற் கல்வி மாமன்றம்” என்ற அமைப்பை 1996ம் ஆண்டு தொடங்கி, மாணவர்களுக்கு தேக நலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற தேர்வுப் போட்டிகளை நடத்தி, பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கி பணியாற்றினார். வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள், வள்ளுவர் வணங்கிய கடவுள் முதலிய நூல்கள் இவரது தமிழ் இலக்கிய ஆய்வு உணர்வினை புலப்படுத்தும் நூல்கள். வள்ளுவர் தமது திருக்குறளில் உடல் ஒழுக்கம், உடல் நலம் - ஆன்மபலம் முதலியவற்றை வளர்க்கும் விதத்தை வலியுறுத்தி விளக்கியிருக்கிறார் என்பதை, திருக்குறள் புதிய உரை என்ற ஆய்வு நூலை முதன் முதலாக எழுதி தமிழ் நெஞ்சங்களை மகிழச் செய்தார்.