உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிவு

பிஞ்சு நாட்பட முற்றிக் கனிந்ததும்
பிணைப்பு நீங்கி உதிர்ந்திடும் காட்சியை
நெஞ்சி லூன்றி உணர்ந்ததன் பின்புதான்
நீணி லத்தினில் வாழத் துணிகிறேன்!

அற்ப மான செடியின் அடியிலே
அடையும் ஆறுதல் அற்பமே யாதலால்
கற்ப கத்தரு நிழலை வேண்டியே
கதிர வன்வெப்பம் தாங்கத் துணிகிறேன்!

வீழ்ந்த போதி லிறந்திடு வாயென
வீணர் கூக்குரல் போட்டுத் தடுப்பினும்
ஆழ்ந்த கல்விக் கடலில்வெண் முத்துக்கள்
அடைய வேண்டிக் குதிக்கத் துணிகிறேன்!

ஆல காலம் படர்ந்தது வோவென
அனைத்து மேகமும் ஒன்று திரண்டுநன்
னில வானம் முழுவதும் முடினும்
நிலவு மிழ்மதி யாகத் துணிகிறேன்!

முடர் தங்கள் மனமெனும் காட்டிலே
மூர்க்க எண்ணப் புலிகள் எதிர்த்திடின்
ஏடு தன்னையோர் வில்லென ஏந்தியே
இனிய சொற்கணை எய்யத் துணிகிறேன்!

அருளி லாமல் பணத்தைப் பெருக்கினோர்
அகத்து தித்து வளர்ந்து நிறைந்தபே
ரிருளெ லாமொன்று கூடினு மஞ்சிடா
தெரியும் நெய்விளக் காகத் துணிகிறேன்!

தீட்டி வீசிடும் கத்திக் கெதிர்செலின்
தீமை நேருமென் றுள்ள முணரினும்
நாட்டு நன்மையைக் கோரி யழைத்திடின்
நகை முகத்துடன் தாங்கத் துணிகிறேன்!

                                                           —கவிஞர் வெள்ளியங்காட்டான்.
                                                               நன்றி :- (எழுக ! கவிஞ !! - தொகுப்பு)