பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

ஐம்பது பேரில் நாற்பத்தாறு பேர் ஒப்புக் கொண்டு விட்டார்கள். ஆனாலும், ஒப்பற்ற ஒரு தலைவருக்கு நாம் கொடுக்கும் வரவேற்பு ஒரு மனதாக இருக்கவேண்டும் என்று நான் எடுத்துக்கூறியதன் பேரில் அந்த நான்கு தோழர்களும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார்கள்.

நாம் ஒருமனதாகத் தீர்மானித்து விட்டோம், ஆனால் நம் வரவேற்பைப் பெரியார் ஏற்றுக் கொள்வார்களா? இப்படி ஒருவர் ஐயப்பட்டார்.

இந்த ஐயம் சரியானதே. ஏற்பாடுகளையும் செய்வோம், பெரியார் கப்பலை விட்டு இறங்குமுன் கப்பலிலேயே போய்ச் சந்திக்கலாம். அவர் ஒப்புக்கொண்டால் வரவேற்புக் கொடுத்துப் பல கூட்டங்கள் நடத்துவோம், இல்லாவிட்டால் அமைதியாகத் திரும்பிவிடுவோம்.

இவ்வாறு முடிவெடுத்தோம்.

நுழைமுகத்தில் கப்பல் வந்து கொண்டிருக்கிறது. இரங்கூன் ஆற்றில் நுழைந்து துறைமுகம் வர இன்னும் நான்கு மணி நேரம் ஆகும்.

நான் காலை 5 மணிக்கு துறைமுகம் சென்றேன். துறைமுகம் வந்து சேரும் முன்பே கப்பலில் ஏறிச் சுங்க அதிகாரிகள் சோதனை போடுவது வழக்கம். அந்தச் சோதனைக்காக ஒரு மோட்டார் படகில் சுங்க அதிகாரிகள் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் விரைந்து சென்றேன். "நானும் உங்களுடன் வருகிறேன்" என்றேன்.

"நீ எங்களோடு வரக்கூடாதே" என்றார்கள்.