பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பர்மாவில் பெரியார்

"தெரியும், புத்த சமய மாநாட்டுக்காக எங்கள் தலைவர் இந்தக் கப்பலில் வருகிறார். முன்னாலேயே அவரைப் பார்த்து முன்னேற்பாடுகள் செய்யவேண்டும். தயவுசெய்து என்னை அழைத்துச் செல்லுங்கள்" என்றேன். மாநாடு என்றவுடன் அவர்கள் மகிழ்ச்சியோடு என்னைச் சேர்த்துக் கொண்டார்கள்.

துறைமுகத்தில் வந்து சேர்வதற்கு நான்கு மணி நேரம் முன்னதாக, ஆற்று நுழைமுகத்தில் மெல்ல வந்து கொண்டிருந்த கப்பலில் சுங்க அதிகாரிகளுடன் நானும் கப்பலில் ஏறினேன். சற்றுநேரத்தில் குடியேற்ற அதிகாரிகளும் கப்பலில் ஏறிவிட்டார்கள். சுங்கஅதிகாரிகள் ஒருபுறம் குடியேற்ற அதிகாரிகள் ஒருபுறம் பயணிகளைச் சோதனையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நான் பெரியாரைத் தேடினேன். கப்பல் மேல்தட்டில் அதிகாரிகளின் சோதனைக்காகப் பெரியார் க்யூ வரிசையில் நின்று கொண்டிருந்தார், அவர் அருகில் மணியம்மையார். அடுத்து உதவியாளர் ராஜாராம்.

நேரே பெரியாரிடம் சென்று "வணக்கம் அய்யா" என்று வணங்கினேன்.

"நான்கு நாளாகக் கப்பலில் இருந்தபோது என்ன செய்தாய்? இப்போது இறங்கப் போகிறபோது வருகிறாயே, அதிகாரிகள் பார்த்தால் சினம் கொள்வார்கள். போ போ" என்றார் பெரியார்.

அய்யா, நான் கரையிலிருந்து தான் வருகிறேன். அதிகாரிகளின் லாஞ்சில் தான் வந்தேன்.