பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பர்மாவில் பெரியார்

கருப்புச்சட்டையும், வெள்ளைத் தாடியும், சிவந்த மேனியும், நிமிர்ந்த பார்வையும் கொண்ட பொலிவு மிகுந்த அந்தத் தலைவரையே எல்லாரும் நோக்கினார்கள்.

யார் இவர்?

புத்த சமய மாநாட்டிற்காக வந்திருக்கும் இந்திய நாட்டுப் பொங்கி!

புத்த பிக்குகளை பர்மிய மொழியில் பொங்கி (Poungyi) என்று அழைப்பார்கள்.

அருகில் வந்தார்கள் வணங்கினார்கள்!

காஞ்சி மடாதிபதிக்கு நமது குடியரசுத் தலைவர்களும், தலைமையமைச்சர்களும், நீதிபதிகளும், IAS அதிகாரிகளும், மேல் சாதியினரும் செய்கிற மரியாதையை அன்று பெரியாரைக் கண்ட அத்தனைபேரும் செய்ததை நான் கண்டேன்.

அவரை ஒரு புத்தசமய பிக்குவாகக் கருதிய அவர்கள் அனைவரும் அவ்வாறு வணங்கி நின்றார்கள்.

காவல் துறை அதிகாரிகளும், சுங்கத் துறையினரும், கப்பலடிக்குக் காவலுக்கு வந்திருந்த இராணுவ வீரர்களும் கூடப் பெரியாரைக் கண்டவுடன் கையெடுத்துக் கூப்பி வணங்கினார்கள்.

சுங்கப்பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகள் பெரியாரின் பெட்டிகளைத் திறக்கவேண்டாம் என்று கூறியே எங்களைப் போகவழிவிட்டார்கள். எனவே, அந்த ஆய்வுக் கூடத்துக்குள் நுழைந்த ஐந்தாவது நொடி துறைமுகத்தின் வெளியில் வந்துவிட்டோம்.