பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பர்மாவில் பெரியார்

ஒப்புக் கொண்டார். முஸ்லிம் என்பதற்காக அவர் அன்பைப் புறக்கணிக்க முடியாது. மாடிப்படியேறி வரமுடியவில்லை என்று பெரியார் கூறுவதனால்தான் நாம் வேறு இடம் ஏற்பாடு செய்கிறோம். இல்லாவிட்டால் என் வீட்டிலேயே தொடர்ந்து இருக்கலாம். தயவு செய்து குழப்பம் செய்யாதீர்கள்." என்று வேண்டிக் கேட்டுக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.

வீடு தயாராக இருப்பதாக நண்பர்கள் கூறியதால் அன்று மாலையே பெரியாரை மவுந்தாலே வீதி வீட்டுக்கு அழைத்துச் சென்றோம்.

எங்கள் வாக்கு வாதங்களெல்லாம் அன்று பெரியாருக்குத் தெரியாது.

மறுநாள் புத்த சமய மாநாட்டுக்குச் சென்று வந்தார் பெரியார். மாநாட்டில் பெரியார் 15 மணித்துளிகள் தமிழில் பேசினார். அவர் பேசிய பேச்சின் கருத்தை டாக்டர் அம்பேத்கார் ஆங்கிலத்தில் பேசினார், புத்த சமயத்தின் புதுமைச் செயல்களைப் பாராட்டிப் பெரியார் பேசிய கருத்துக்களை மாநாட்டினர் கேட்டு மகிழ்ந்தனர். பர்மியப் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

மாநாடு முடிந்தவுடனேயே பெரியார் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுப் போக விரும்பினார். ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு வாரம் தங்கி நாங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பேச ஒப்புக் கொண்டார்.

முதலில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம் வழக்கமாக பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டங்கள் இராமகிருஷ்ணா மிஷன் நூலகத்தின் சொற்பொழிவுக் கூடத்தில் தான் நடைபெறும்.