பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

27

பெரியார் பேசுவதற்காக ஏற்பாடு செய்த அந்த நாளில் வேறு கூட்டத்திற்கு அனுமதி வழங்கபட்டதால் வேறுஇடம் தேடிக் கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அகில பர்மா இந்தியன் காங்கிரஸ் இரங்கூனில் இந்தியப் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார்கள். அந்த உயர்நிலைப் பள்ளியில் ஒரு சொற் பொழிவுக் கூடம் இருந்தது. அதன் பெயர் கால்சா மண்டபம் அதையே பெரியார் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தோம்.

இராமகிருஷ்ணா மிஷன் சொற்பொழிவுக் கூடத்தில் ஆயிரம் பேர் அமரலாம். இந்தியன் காங்கிரஸ் உயர்நிலை பள்ளிக்கூடத்து மண்டபத்தில் 500 பேர்தான் அமரமுடியும். ஒரே நாளில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததால் 500 பேர் வந்தாலே போதும் என்று நினைத்தோம்.

பெரியார் என்னை அழைத்தார். "கூட்டம் எங்கே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? திறந்த வெளியிலா? ஏதேனும் மண்டபத்திலா?"

"மண்டபத்தில் தான்!"

"அப்படியானால் கட்டணம் வைக்கலாமே?

இல்லை இந்த நாட்டுக்குப் புதிதாக வந்திருக்கிறீர்கள். கூட்டம் நிறைய வராது. கூட்டம் சேர வேண்டும் என்றால் கட்டணம் வைக்கக்கூடாது. கட்டணம் வைத்தால் கூட்டம் குறைந்து விடும் வேண்டாம்."

"அப்படியானால் மிகக் குறைந்த கட்டணம் வைக்கலாம். ஒரு ரூபாய் வைத்தால் கூடப் போதும்."

"இல்லை, கட்டணம் வேண்டாம். கூட்டம் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக வருகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு கருத்துப் பரவும்."