பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பர்மாவில் பெரியார்

கொள்கிறேன். என் குரல் உயர உயர வெளியில் அமைதி நிலவியது, அத்தனை பேரும் உட்கார்ந்து விட்டார்கள்.

கழகத் தோழர்கள் வியப்படைந்தார்கள். ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டுக் கூட்டம் நடத்த முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சிய அவர்கள் என் கட்டளைக்குப் பணிந்து இரண்டாயிரம் தமிழ்ப் பெருமக்கள் அமர்ந்துவிட்ட காட்சி கண்டு பெருமிதம் அடைந்தார்கள். கட்டுப்பாடு என்றால் அதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு என்றார்கள்.

வெளியில் அமைதி ஏற்பட்டு விட்டது என்ற உடனே, தலைமையுரை ஆற்றிய தோழரைத் தொடர்ந்து பேசச் சொல்லிவிட்டு பெரியார் அருகில் போய் அமர்ந்தேன்.

பெரியார் என் பக்கம் குனிந்தார்.

"கூட்டத்தைச் சமாளிக்கத் தெரிந்து வைத்திருக்கிறாய். ஆனால் ஒரு தவறு செய்து விட்டாய், ஐந்து ரூபாய் டிக்கெட் வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் சுலபமாகக் கிடைத்திருக்கும்.கோட்டை விட்டு விட்டாய்" என்றார்.

அதுதான் பெரியாருக்காக, நாங்கள் ஏற்பாடு செய்த முதல் கூட்டம். பெரியார் தன்மானக் கொள்கைகளை விளக்கித் தனக்கே உரிய பாணியில் மிக அருமையாகச் சொற்பொழிவாற்றினார். கட்சியரசியலையே தொடாமல் அன்று அவர் பேசியது தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தது. கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு. சாதி எதிர்ப்பு, போன்ற தன்மானக் கருத்துக்களையே இரண்டு மணிநேரம் பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு பெரியாரை ஒரு ஜீப்பில் நிற்க வைத்து வெளியில் இருந்த கூட்டத்தின் மத்தியில் பேச வைத்தோம்.