பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

37

மறுநாள் இரங்கூன் ஆற்றின் எதிர்கரையில் உள்ள லான்மடோ என்ற சிற்றுாரில் உள்ள கழகத்தோழர்கள் பெரிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரியார் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.

வழக்கம்போல் மாலை 5 மணிக்கு பெரியாரைப் பார்க்கச் சென்றேன், பெரியாருடன் ஆற்றின் அக்கரைக்குப் போக விசைப்படகு (Motor Launch) ஏற்பாடு செய்து வைத்திருந்தோம்.

நான் பெரியாரைப் பார்த்தவுடனே, அவர் "இனிமேல் கூட்டம் எதுவும் நடத்த வேண்டாம்" என்றார். அன்றைய கூட்டத்திற்கும் வர மறுத்துவிட்டார். அக்கரைத் தோழர்கள் வருத்தத்துடன் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள்.

"ஏன் வேண்டாம் என்கிறீர்கள்" என்று கேட்டேன்.

"காலையில் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். புத்தமத மாநாட்டிற்காக உங்களை இந்த அரசு பெரிதும் மதித்து வரவேற்றிருக்கிறது. இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் வகையில் தங்கள் நடவடிக்கைகள் இருப்பதாகவே அரசு கருதுகிறது. ஆனால் விருந்தாளியாக வந்திருக்கும் தங்களை வெளிப்படையாகக் கண்டிக்க அரசு விரும்பவில்லை. ஆகவே என்னைத் தங்களிடம் அனுப்பி, தாங்கள் மேற்கொண்டு எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாதவாறு வேண்டிக் கொள்ளும்படி அரசு பணித்திருக்கிறது" என்று அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கூறினாராம்.

பெரியார் இந்த நிகழ்ச்சியைக் கூறினார்.