பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பர்மாவில்பெரியார்

"அய்யா,இன்று கழகத்தோழர்கள் பெருமுயற்சி செய்து இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். நீங்கள் வராவிட்டால் அவர்கள் ஆர்வமே போய் விடும். ஆகவே, ஏற்பாடாகிவிட்ட இந்தக் கூட்டத்துக்கு மட்டும் வாருங்கள், நாளைமுதல் வேறு கூட்டங்கள் ஏற்பாடு செய்யவில்லை" என்று நான் கூறினேன்.

"இன்றைய கூட்டத்திலேயே கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த இன்ஸ்பெக்டர் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார். இன்று நான் கலந்து கொண்டு பேசி நாளைச் சென்னைக்குச் சென்றுவிடுவேன். அதன் எதிர் விளைவுகள் உங்களை யல்லவா பாதிக்கும். என்னால் இங்கு பிழைக்க வந்த நீங்கள் அவதிப்படுவதை நான் விரும்பவில்லை" என்று கண்டிப்பாக மறுத்து விட்டார்.

பெரியார் கூட்டத்திற்கு வருவதில்லை என்று உறுதியாக இருந்தார்.

வெளியே கழகத் தோழர்கள் - குறிப்பாக அக்கரைத் தோழர்கள் குமுறிக் கொண்டிருந்தார்கள்.

நான் வெளியில் வந்தேன். தோழர்களைச் சந்தித்தேன். என்ன செய்யலாம் என்று சிந்தித்தோம்.

அரசு தடை விதித்தால் ஓர் எச்சரிக்கைக் குறிப்பாவது அனுப்பியிருக்கும். இது ரசிகரஞ்சனிக்காரன் செய்த சூழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் வந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மிகப் பக்குவமாகப் பெரியாரிடம் பேசியிருக்கிறார். பெரியாரும் நம்மீது உள்ள அக்கறையால் மறுக்கிறார். பெரியாரை இது பொய் யென்று நம்ப வைப்பதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தோம்.