பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

39

துறைமுகப் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஊராமா. அவரை எங்களுக்குத் தெரியும், அவரைப் போய்ப் பார்க்கிறோம் என்றார் ஒரு தோழர்.

உடனே ஒரு வாடகை ஜீப்பில், நான்கு தோழர்கள் துறைமுகக் காவல் நிலையம் நோக்கிப் பறந்தார்கள்.

கூட்டம் ஏற்பாடு செய்திருப்பதையும் பெரியார் வர மறுப்பதையும் விளக்கமாகக் கூறினார்கள் அவரே நேரில் வந்து பெரியாரிடம் பேச வேண்டும் என்று கூப்பிட்டார்கள்.

ஊராமா, தமிழ் வணிகர் ஒருவரின் பர்மிய மனைவிக்குப் பிறந்தவர். பர்மியக் குடிமகனாக.இருந்தாலும் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர், எல்லாவற்றையும் விவரமாகக் கேட்டுக் கொண்டார். உடனே தோழர்களோடு பெரியார் தங்கியிருக்கும் இடத்திற்குப் புறப்பட்டு வந்தார்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பெரியாருக்கு பர்மிய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. இரகசியமாகக்கூட எதுவும் செய்யவில்லை என்று எடுத்துக் கூறினார். இந்து மதவெறி கொண்ட சிலர் அயம்பது ரூபாய் இலஞ்சங்கொடுத்து ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டரை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றே தாம் நினைப்பதாகக் கூறினார்.

பெரியார் மேலும் பல கூட்டங்களில் பேசலாம் என்றும் அன்றைய கூட்டத்திற்கு தானே தலைமை வகித்து நடத்திக் கொடுப்பதாகவும், தான் எவ்விதக் கலகமும் ஏற்படாமல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு பெரியார் புறப்பட்டு வந்தார்.