பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மோல்மேன் பயணம்


இரங்கூன் பர்மாவின் தலைநகரம். பர்மாவின் நடுமையத்தில் உள்ள மாந்தலே அந்தக் காலத்துத் தலைநகரம்; பர்மாவில் பழங்காலத்தில் பல அரசுகள் இருந்தாலும், மாந்தலேயைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசுதான் பேரரசாக விளங்கியது.

பர்மாவில் குறிப்பிடத்தக்க மூன்றாவது பெரிய நகரம் மோல்மேன்.

மோல்மேன் நகருக்குள்ள சிறப்பு அது ஓர் ஆற்றுத் துறைமுகமாகும். ஐராவதி நதிக்கரையில் உள்ளது மாந்தலே நகரம். ஐராவதி ஆற்றின் கிளையாறாகிய இரங்கூன் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது இரங்கூன் நகரம். அதுபோல சால்வீன் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது மோல்மேன் நகரம்.

இரங்கூன் ஆறு ஆழமானது. ஆகையால் கப்பல்கள் இரங்கூன் ஆற்று வழியாக நகருக்குள் வந்துவிடும்.

சால்வீன் ஆற்றின் ஆழம் குறைவாக இருப்பதால், கப்பல்கள் வருவதில்லை. வரும் கப்பல்கள் கடலிலேயே நங்கூரம் பாய்ச்சி நின்றுவிடும். கப்பலிலிருந்து சரக்குகள் மோட்டார்ப் படகுகள் மூலமே கொண்டு வரப்படும். ஏற்றுமதியும் அவ்வாறே.