பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பர்மாவில் பெரியார்

என்றும் இந்திய மக்களை அன்புடன் அழைத்தது அந்த அறிக்கை.

"வரவேற்பாளர்கள் எல்லாரும் எங்கே?" என்று பெரியார் கேட்டார்.

"அவர்கள் வர மாட்டார்கள்:" இது அந்த மூன்று தமிழ் இளைஞர்களின் பதில்.

"அந்தச் செட்டியார் எங்கே?"

"இரங்கூனுக்கு வந்து உங்களை அழைக்க வந்தவரா? அவரும் வரமாட்டார்!"

ஏன்?

நேற்று வந்த "ரசிகரஞ்சனி" பத்திரிகையில் நீங்கள் இரங்கூனில் இந்து மதத்தைத் தாக்கிப் பேசியதாகவும், இதனால் மதக் கலவரம் ஏற்படக் கூடிய சூழ்நிலையிருப்பதாகவும், முதல் பக்கம் கொட்டை எழுத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள்.

அதைப்பார்த்த பலர் உங்களுக்கு வரவேற்புக் கொடுத்தால் பெரும் கலவரம் செய்வதாக அச்சுறுத்தியதால், வரவேற்புக் குழுவினர் பயந்துபோய் விட்டார்கள். அந்தச் செட்டியாரும் பயந்து போய் ஒதுங்கி விட்டார்.

"அந்த ஆள் இங்கே வந்து செய்தியைச் சொல்லி எங்களைத் திருப்பி அனுப்பி இருக்கலாம் அல்லவா?"

அமைதி நிலவியது.

"நீங்கள் யார்?

"நாங்கள் ஆதி திராவிடர்கள். இங்கே கூலி வேலை செய்து பிழைக்கிறோம். பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள். அய்யாவைப் பார்ப்பதற்காக வந்தோம். சிறிது தாமதமாகி விட்டது."