பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

51


அவர் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர் அல்லர். ஆகவே சைவ உணவு கிடைக்காவிட்டாலும் கவலைப்படவேண்டியதில்லை.

அவர் அசைவ உணவு இருந்தால்தான் சாப்பாடு செல்லும் என்ற வகையும் அல்லர். ஆகவே, முழுக்க முழுக்கச் சைவமாக உள்ளவர்கள் நடுவிலும் அவர் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு இருக்க முடியும்.

சாதிமத வேற்றுமைகளைக் குழி தோண்டிப் புதைப்பதே இலட்சியமாக வாழ்ந்து கொண்டிருந்த அவர், எங்கும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் யார் மத்தியிலும் அன்புறவு கொண்டாடிக் காலந்தள்ளமுடியும்.

எனவே சமுதாயத்தால் கடைக்கோடியினராக ஒதுக்கப்பட்ட அந்த ஏழைத் தோழர்களின் பராமரிப்பில், பெரியார் வசதிக்குறைவு என்ற எண்ணமேயில்லாமல் - எப்போதும்போல் இயல்பாக அந்த இரண்டு நாட்களைக் கழிக்கமுடிந்தது.

மூன்றாவது நாள் மாலை வானூர்தியில் தன்னந்தனியாக பெரியார் மோல்மேனிலிருந்து இரங்கூன் வந்து சேர்ந்தார்.

விமானத் திடலிலிருந்து அலுவலகத்திற்கு அரசாங்கப் பேருந்திலேயே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.

அந்தப் பேருந்தை விட்டுக் கீழே இறங்கியவுடன் தன்னைச் சூழ்ந்துகொண்ட டாக்சிக் காரர்களில் ஒருவனுடைய வண்டியில் அவர் ஏறி உட்கார்ந்தவுடன், அவன் எங்கே போகவேண்டும் என்று கேட்காமலே பெரியாரை மவுந்தாலே வீதியில் அவர் தங்கியிருந்த வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டுவிட்டான்.