பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

61


சிங்கப்பூர் செல்லும் நாள் வந்தது. கப்பலடிக்கு பெரியாரை வழியனுப்ப பர்மா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் யாவரும் வந்திருக்கிறார்கள்.

கப்பலடியில் பல தோழர்கள் பெரியாருடன் படம் எடுத்துக்கொண்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு,"முடிந்ததா? நான் உள்ளே போகலாமா?" என்று சோதனைக் கூடத்திற்குள் நுழைய முற்பட்டார் பெரியார்.

திடீரென்று என் பக்கம் திரும்பினார்.

"நானும் பார்க்கிறேன். எவனெவனோ வந்து படம் எடுத்துக்கொள்கிறான். நீ என்னோடு நின்று ஒரு படம் கூட எடுத்துக்கொள்ளவில்லையே! இங்கே வா!" என்று அழைத்தார் பெரியார்.

புகைப்படக் காரரை அழைத்து " எங்களை ஒரு படம் எடு" என்று கட்டளையிட்டார்.

அவர் எடுத்தாயிற்று என்று சொன்னபிறகு சோதனைக் கூடத்திற்குள் நுழைந்தார். நானும் அவருடைய பெட்டியுடன் பின் தொடர்த்தேன். மற்ற தோழர்கள் வெளியில் நின்றுவிட்டார்கள்.

சோதனை முடிந்து கப்பலுக்குள் சென்றோம். பெரியாருக்கென்று பதிவு செய்யப்பட்ட கப்பல் அறை (Cabin) வரை நானும் சென்றேன்.

பெட்டியை அறையின் உள்ளே வைத்துவிட்டு. அறைக்கதவின் அருகில் வந்து நின்றேன். " போய் வாருங்கள் வணக்கம்" என்று கூறினேன்.

பெரியார் தம் இரு கைகளாலும் என் இரு தோள்களையும் பிடித்துக் கொண்டார்.