பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

அன்றைய நிலையில் போட்டிக் கழகமாக உருவெடுத்து விட்ட, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் இயங்கிவந்த நாங்கள் கொடுத்த வரவேற்பைச் சற்றும் மனம் கோணாமல் ஏற்றுக் கொண்ட பெருந்தன்மை -

வெளிநாட்டுக்குப் பிழைக்க வந்த நாங்கள் அவருடைய வருகையால் தொல்லைக்கு ஆளாகக் கூடாதென்ற கருத்தில் மேற்கொண்டு கூட்டங்கள் வேண்டாம் என்று மறுத்தபோது அவரிடம் காணப்பட்ட பிறர் நலம் பேணும் தகைமை -

என் அனுபவக் குறைவால் மோல்மேன் பயணம் ஏற்படுத்திய வீண்தொல்லைக்குப் பிறகு, என் மனத் துயரை அறிந்து என்னை அமைதிப் படுத்திய அந்த வாஞ்சை -

இவை எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பெரியார் மீது ஏற்படுகின்ற மதிப்பு சுடச்சுடரும் பொன்போல் ஒளிர்கின்றது.

புத்தருக்குப் பிறகு இந்திய நாட்டில், மக்கள் நலம் ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்த ஒப்பற்ற தலைவர் பெரியாரை வரவேற்கும் வாய்ப்பும் - அவருடைய இலட்சியத் தொண்டனாக இயங்கும் நிலையும் கொண்டிருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

மக்களிடையே தன்மான உணர்வு ஏற்படுத்துதல் - சாதி மத பேதங்களைத் தகர்த்தல் - ஒருவரை யொருவர் ஏமாற்றியும், சுரண்டியும் வாழும் கொடுந் தன்மையைப் போக்கி சமத்துவ நிலையில் வாழும்படியான பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைத்தல் - இதுபோன்ற அவருடைய இலட்சியங்கள் நிறைவேற உழைப்பதே நம் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்;