பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பறக்கும் மனிதன்

அதோ அந்தப்பறவையைப் பார்! ஆஹா, அது எத்தனை அழகாகப் பறக்கிறது! வான வெளியிலே அது ஒய்யாரமாகக் காற்றில் மிதக்கிறது. இறக்கைகளை அசைக்காமலேயே அப்படியே விரித்து வைத்துக்கொண்டு கம்பீரமாகக் காற்றில் மிதந்துகொண்டிருக்கிறது. சில சமயங்களிலே அது இறக்கைகளை அடிக்கிறது. மறுபடியும் இறக்கைகளை அசைக்காமல் விரித்து வைத்துக்கொண்டு காற்றிலே மிதந்துகொண்டு போகிறது. பார்ப்பதற்கு ஒரே ஆச்சரியமாக இல்லையா?

கருடனும், கழுகும் இவ்வாறு இறக்கைகளை விரித்து வைத்துக்கொண்டு ஆகாயத்திலே நெடுநேரம் பறப்பதையும் வட்டமிடுவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அந்தப் பறவைகளைப் பார்க்கும்போது நாமும் அப்படிப் பறந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசையுண்டாகிறதல்லவா? ஆகாயத்தில் பறந்து சென்றால் எத்தனை இன்பமாக இருக்கும்!