பக்கம்:பறவைகளைப் பார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI. இணை கூடுதல்

இராவேனிற் காலத்திலே புத்துயிர் பிறக்கின்றது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலமும் அதுவே. பொதுவாக ஆண் பறவைகள்தான் பெண் பறவைகளை நேசித்து இணைகூட முயலும். அதற்காகத் திருமணக்கோலம் பூண்டு அவை பல வண்ணங்களையுடைய இறகுகளோடு விளங்குகின்றன. கொண்டை, தாடி, நீண்ட கழுத்திறகுகள், வால் தோகைகள், அங்கங்கே நல்ல நிறங்களையுடைய உடல் தோலின் தோற்றம், ஒளிபொருந்திய நிறங்களுடைய அலகுகள், கால்கள் இவற்றைக் கொண்டு அவை வாலிவோடு கவர்ச்சியாகத் தோன்றுகின்றன.

ஒவ்வொரு ஆண் பறவையும் தனக்கென ஒரு நிலப் பகுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது. பெண் பறவைகளைக் கவர்ச்சி செய்து அழைக்கிறது. போட்டிக்கு வரும் பறவைகளோடு சண்டையிடுகிறது. பிறகு இணை கூடுகிறது. இதைத் தொடர்ந்து கூடு கட்டுதல், குஞ்சுகளைப் பேணுதல் முதலிய கடமைகள் துவங்குகின்றன.

பெண் பறவை கவர்ச்சியற்ற நிறத்துடனேயே இருக்கும். இப்படி இருப்பதால் இது அடைகாக்கும்போது தீங்கு நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிகிறது. பகைவர்கள் கண்ணில் இது படுவதில்லை. ஆனால் உள்ளான், காடை முதலிய இனங்களில் பெண் பறவைகள்தான் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்த இனப் பெண் பறவைகள் முட்டையிட்ட பிறகு ஆண் பறவைகளே அடைகாத்துக் குஞ்சுகளைக் காக்கின்றன!

நமது தேசீயப் பறவையான மயில், பெட்டையைக் கவர்ச்சி செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?

24