பக்கம்:பறவைகளைப் பார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆந்தை, கிளி, மைனா, மலைமொங்கான் போன்ற பறவைகள் கூடு அமைக்கும். இயற்கையாக உள்ள பொந்துகளை அவை பயன்படுத்துவதோடு தாமாகவே பொந்துகளை உண்டாக்கவும் செய்யும். மலைமொங்கான் ஒரு விநோதமான வழக்க முடையது. மரத்திலுள்ள பொந்திலே முட்டையிட்டுப் பெண் பறவை அடைகாக்கும் பொழுது ஆண் பறவை கூட்டை முழுவதும் அடைத்துவிடும். ஒரு சிறிய ஓட்டை மட்டுமே அதில் இருக்கும். ஆண் பறவை இரைதேடிக் கொண்டு வந்து அதன் வழியாகப் பெட்டைக்குக் கொடுக்கும்.

(5) வெளியே செல்லும் பொழுது மூடப்படும் கூடுகள்: முக்குளிப்பான், நீர்க்கோழி, காட்டு வாத்து இவற்றின் கூடுகள் மேலே திறந்து இருக்கும். ஆனால் கூட்டைவிட்டுப் போகும்பொழுது ஆண் பெண் பறவைகள் முட்டைகளை நன்றாக மூடிவைத்து விட்டுப் போகும். முக்குளிப்பானுடைய கூடு, களைகளாலும் நாணல் தட்டுகளாலும் ஆன சிறு தெப்பம்போலக் காணப்படும். வறண்ட தழைகளைப் போலவே இக் கூடுகள் தோன்றும்.

(6) கூடென்றே சொல்லமுடியாத கூட்டுகள் : ஆலா, ஆள்காட்டி, கரைக்கோழி இவை உண்மையில் கூடு கட்டுகட்டுவதாகவே சொல்ல முடிாது. இவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் முட்டைகள் நிறத்திலே சுற்று புறத்தின் நிறத்தைப் போலவே இருப்பதால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. கரைக் கோழி கிளிஞ்சல்களையும், கூழாங்கற்களையும், கரையிலுள்ள பாறைமீது சேர்த்து வைத்து அவற்றின் மேலே முட்டையிடுகின்றது.

சாதாரணமாகப் பெண் பறவைதான் அடைகாக்கும். ஆனால் ஆண் பறவையும் பெட்டைக்கு இப்பணியில் உதவ முன்வருவதுண்டு, சில வேளைகளில் ஆண் அடைகாத்துக் கொண்டு, பெட்டை இரை தேடி உண்பதற்கு வழி செய்யும்.

29