பக்கம்:பறவைகளைப் பார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவற்றல் ஓடவும் நீந்தவும் இரையைக் கொத்தித் தின்னவும் முடியும்.

குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகப் பறவைகள் பகைவரை எதிர்த்து மிகத் துணிச்சலுடன் போராடும். சிறிய கொண்டைக்குருவி ஒன்று பருந்தொன்றைத் தாக்கி துரத்தியடித்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆபத்து வரும் என்று தெரிந்தால் பறவைகள் ஓர் எச்சரிக்கை ஒலி கொடுக்கும். உடனே சிறு குஞ்சுகள் தங்கள் தாயின் சிறகுகளுக்குள் புகுந்து கொள்ளும்.

கடற்கரையிலும், மரஞ்செடி கொடிகள் குறைவாக உள்ள இடங்களிலும் வசிக்கும் பறவைகள் ஆபத்து வரும் என்று தோன்றினால் தரையிலே அசையாமல் படுத்துக் கொள்ளும் இயல்புடையவை. தாயின் எச்சரிப்புக் குரல் கேட்டதும் குஞ்சுகள் தரையோடு தரையாகப் படுத்துக் கொள்ளும்.

குஞ்சுகளைக் கவரவரும் பகைவரைக் கவுதாரி போன்ற பறவைகள் ஏமாற்றி அவற்றைக் காப்பதுண்டு. இவை காயமுற்றவை போலவோ நொண்டியானவை போலவோ நடிக்கும். உடனே பகைப் பறவைகள் குஞ்சுகளை விட்டு இவற்றைப் பிடிக்க ஓடிவரும். சிறிது தூரம் அவற்றை இவ்வாறு திசைமாற்றி இழுத்துக்கொண்டு சென்று இந்தப் பறவைகள் பறந்தோடிவிடும்.

இவ்வாறு அன்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான குஞ்சுகள் ஒவ்வொரு ஆண்டிலும் மடிகின்றன.

33