பக்கம்:பறவைகளைப் பார்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமைந்துள்ள பறவைகள் பட் பட வென்ற சிறகுகளை அடித்துக் கொண்டு சிரமப்பட்டுப் பறக்கும்.

பறப்பது மூன்று வகைப்படும். (1) சிறகடித்தல்; பெரும்பாலான பறவைகள் இவ்வாறுதான் பறக்கின்றன. (2) சரிந்து வருதல், வேகமாகப் பறந்து பிறகு சிறகுகளை அடிக்காமல் சருக்கியவாறு வருதல். (3) வானில் மிதந்தவாறுபறத்தல். சிறகுகளை அடிக்காமலேயே சில பறவைகள் வானில் நீண்ட நேரம் வட்டமிடுவதைக் காணலாம்.

திறந்த வெளியில் மட்டும் பறக்கும் பறவைகளுக்கு நீண்டதும் குறுகலானதும் நுனியில் கூர்மையானதுமான சிறகுகள் இருக்கும். இச்சிறகுகளின் நுனியில் எழுகின்ற ஒலியுடன் இப் பறவைகள் மிக வேகமாகப் பறக்கின்றன். காட்டில் வசிக்கும் பறவைகளுக்குக் குறுகிய வட்டமான சிறகுகள் இருக்கும். பறக்கத் தொடங்கும் பொழுது இப்பறவைகளின் சிறகுகளில் ஒலி உண்டாகும். ஆனால் ஆந்தைக்குச் சிறிய சிறகுகள் இருந்தாலும் ஒலியே இல்லாமல் பறக்கின்றது. ஏனென்றால் அதன் சிறகிலுள்ள இறகுகள் பட்டுப் போல இருப்பதால் ஒலி வெளியில் கேட்பதில்லை. இதனால் ஆந்தை கொஞ்சமும் ஒலி எழுப்பாமல் பறந்து சென்று இரையைப் பிடிக்க முடிகின்றது.

பறவைகள் தமது இறகுகளைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்துகின்றன. சுத்தம் செய்யவும், கோதி ஒழுங்குபடுத்தவும், எண்ணெய் இடவும் அவை எவ்வளவோ நேரம் செலவழிக்கும். தமது உடலிலே வாலின் அடிப்பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளிலிருந்து அலகால் எண்ணெயை எடுத்து இறகுகளுக்கிட்டுக் கோதுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை பல பறவைகள் தமது இறகுகளை உதிர்த்துவிடும். இலையுதிர் காலத்திலே இது நடக்கும். எல்லா இறகுகளும் உதிர்ந்து புதிய இறகுகள் தோன்றும். ஆண்டுக்கு இருமுறை சில பறவைகள் இறகுதிர்ப்

43