பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் மனைவி பெயர் தங்கம்மாள். அவர்கள் வீட்டில் பணம் நிறைய இருந்தது. சொன்ன வேலையைச் செய்ய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் பேசிச் சிரித்து விளையாட ஒரு பிள்ளை இல்லை. கொஞ்சிப் பேசி மகிழ ஒரு குழந்தை இல்லையே என்று அவர்களுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது.

ஒரு நாள் ஒரு மனிதன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். அவன் கையில் ஒர் அழகான பெண் குழந்தை இருந்தது, தங்கம்மாள் அந்தப் பெண் குழந்தையைப் பார்த்தாள். அவளுக்கு அந்தப் பெண் குழந்தை மீது ஆசை ஏற்பட்டது. அவள் பொன்னப்பரிடம், "எனக்கு அந்தக் குழந்தையை வாங்கித் தாருங்கள்" என்று சொன்னாள்.

அதற்குள் அந்த மனிதன் பேசத்தொடங்கினான்." ஐயா நான் ஒர் ஏழை, என் பெயர் கண்ணப்பன். என் மனைவி பெயர் கண்ணம்மாள். நாங்கள் பால்காரர்கள்.