பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13

எங்களிடம் இரண்டு பசுமாடுகள் இருக்கின்றன. அந்த மாடுகளுக்குப் போடத் தவிடு இல்லை. இந்தப் பெண்குழந்தை எங்களுடையது. இதை வைத்துக்கொண்டு எங்களுக்கு ஒரு வண்டித் தவிடு தாருங்கள் என்றான்".

பொன்னப்பர் வீட்டில் பத்து மாடுகள் இருந்தன. அவற்றிற்குப் போடுவதற்காக அவர் ஓர் அறை நிறையத் தவிடு வைத்திருந்தார். அந்தத் தவிட்டில் ஒரு வண்டி தவிடு அள்ளிக் கொடுத்து விட்டு அந்தப் பெண் குழந்தையை வாங்கிக் கொண்டார்.

தங்கம்மாள் அந்தக் குழந்தையை ஆசையாக வளர்த்து வந்தாள். அந்த அழகான பெண் குழந்தைக்கு முத்துமணி என்று பெயரிட்டாள். முத்துமணியும் தங்கம்மாளிடம் அன்பாக இருந்தாள்.

முத்துமணி தங்கம்மாளை "அம்மா! அம்மா!" என்று தன் சின்ன வாயால் கூப்பிடுவாள். உடனே தங்கம்மாளுக்கு இன்பம் ஏற்படும். "கண்ணே!" என்று முத்துமணியைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு முத்தமிடுவாள்.

முத்துமணி ஒவ்வொரு நாளும் பெரியவளாக வளர்ந்து கொண்டே வந்தாள். அவளுக்குத் தான் இன்னொரு வீட்டுப் பிள்ளை என்பது தெரியாது. தன்னைத் தன் அப்பா விற்றுவிட்டார் என்பதும் தெரியாது. தங்கம்மாள் தன்னை விலைக்கு வாங்கி வளர்க்கிறாள் என்பதும் தெரியாது.