பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

ஒவ்வோர் ஊராகச் சென்று அவள் தன்னைப் பெற்ற அம்மாவைத் தேடினாள்.

வழியில் கண்டவர்களை யெல்லாம் பார்த்து, "என்னைப் பெற்ற அம்மா என்னைத் தவிட்டுக்கு விற்றுவிட்டாள். நான் அவளைத் தேடி வந்திருக்கிறேன். உங்களுக்கு அவளைத் தெரியுமா? தெரிந்தால் காட்டுங்கள்" என்று கேட்டாள்.

"பெற்ற பிள்ளையைத் தவிட்டுக்கு விற்ற அம்மாவை நாங்கள் பார்த்ததில்லை" என்று ஒவ்வொருவரும் பதில் சொல்லிவிட்டார்கள்.

இப்படிப் பல ஊர்கள் சுற்றிவிட்டு முத்துமணி ஒரு சின்ன ஊருக்கு வந்தாள், ஒருநாள் அந்த ஊர்க் கோயில்வாசலில் அவளும் பச்சைக்கிளியும் நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தக் கோயில் வாசலில் ஓர் அம்மா பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா நீங்கள் எதற்காகப் பொங்கலிடுகிறீர்கள்?" என்று கேட்டாள் முத்துமணி.

"தெய்வத்துக்கு" என்றாள் அந்த அம்மா.

"தெய்வத்துக்கு என்றால் எதற்கு? தெய்வமா சாப்பிடுகிறது?" என்று கேட்டாள் முத்துமணி.

"அப்படிப் பேசாதே! என் மகள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகப் பொங்கலிடுகிறேன்.