பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

"ஐயா, உங்களுக்கு மிக நன்றி" என்றுக் கூறிக் கொண்டே எழுந்த பொன்னி அவன் பதில் சொல்வதற்குள் கூட்டத்திற்குள் பாய்ந்தோடி மறைந்து விட்டாள்.

வேக, வேகமாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த தன் பெற்றோர்களை அடைந்து விட்டாள்.

அன்று திருவிழா மிக நன்றாக நடந்தது. பாலப்பட்டிப் பண்ணையார் செலவில் திருவிழா அமர்க்களம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

முருகனுக்கு தீப வழிபாடு நடந்து கொண்டிருந்தது. முருகன் சந்நதியில் நின்று பய பக்தியோடு பொன்னி வணங்கிக் கொண்டிருந்தாள். சற்று தூரத்தில் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன். இதைப் பாலப்பட்டிப் பண்ணையார் கவனித்து விட்டார். உடனே அவர் தன் ஆள் ஒருவனை அழைத்து அந்தப் பெண் யாரென்று கேட்டார்.

அந்த ஆள், தோட்டக்காரக் கண்ணனை நெருங்கி "ஐயா, பண்ணையார் உங்களை அழைத்து வரச் சொன்னார், கொஞ்சம் வருகிறீர்களா?" என்று கூப்பிட்டான். கண்ணன் அவனோடு சென்றான்.

அப்பொழுது அந்த இளைஞனைப் பார்த்துவிட்ட பொன்னி தன் அம்மாவிடம் அவனைச் சுட்டிக் காட்டி, அவன் தனக்கு உதவி செய்ததைக் கூறிக் கொண்டிருந்தாள்.