பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கட கடவென்று பேசினார் பண்ணையார். வள்ளிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. பையனைப் பார்த்தால் நல்லவனாகத் தான் தெரிகிறது. ஊரில் அவனைப் பற்றிப் பேசுவது கேட்டால் பயமாக இருக்கிறது. எதிரில் நின்று கேட்பவரோ பெரிய மனிதர். ஒரே குழப்பமாக இருந்தது. பொன்னியைத் திரும்பிப் பார்த்தாள். அவளோ அந்த இளைஞனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எல்லாம் முருகன் செயல்" என்று நினைத்துக் கொண்டே பண்ணையாரை நோக்கி "ஐயா, உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று சொன்னாள்வள்ளி.

வள்ளியின் பதிலைக் கேட்டுப் பண்ணையார் மிக மகிழ்ச்சி அடைந்தார். பண்ணையார் மகன் கந்தசாமியும் மகிழ்ச்சியோடு காணப்பட்டான். தனக்கு உதவி செய்த அந்த நல்ல இளைஞனே தன் கணவனாக வரப் போகிறான் என்று அறிந்து பொன்னியும் மிக மகிழ்ச்சியடைந்தாள். தான் ஆசைப் பட்ட படி பொன்னி ஒரு பெரிய வீட்டில் வாழப் போகிறாள் என்று கண்ணன் மகிழ்ச்சியடைந்தான்.

அடுத்த மாதமே நல்ல நாள் ஒன்றில் திருமணம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன பிறகு பொன்னி முருகன் கோயிலுக்கு வந்தாள். அவள் முகம் வாடியிருந்தது. வருத்தத்தோடு வந்த அவள் எதிரில் கோயில் மயில் வந்தது.