பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7அங்கங்கே சன்னல் வைத்தது. குளிப்பதற்கும் சமைப்பதற்கும் தனித் தனியாய் அறை அமைத்தது. தனக்கும் நான்கு குஞ்சுகளுக்கும் தனித் தனியாய்ப் படுக்கையறை அமைத்தது. எல்லாம் சேர்ந்து இருப்பதற்கு ஒரு கூடம் அமைத்தது. வீட்டுக்கு வாசலும் வாசலுக்குக் கதவும் அமைத்தது. காய்ந்த இலை சருகுகளைத் தைத்து வீட்டுக்குக் கூரை வேய்ந்தது.

வீடு கட்டி முடிந்ததும், அந்தச் சிட்டு தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு அந்த மண் வீட்டில் குடியிருக்கச் சென்றது.

சிட்டுக் குருவிக் குஞ்சுகளுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி, "அம்மா கட்டிய வீடு, அம்மா கட்டிய வீடு!" என்று சொல்லிக் கும்மாளம் போட்டன. அடிக்கொரு தடவை வீட்டுக்குள் போவதும் வெளியில் வருவதுமாக இருந்தன. அந்தக் குஞ்சுகள் தங்கள் அறைக்குள்ளே போய் இருந்தன; சிறிது நேரம் சென்றவுடன் வெளியில் வந்தன. வீட்டின் எதிரில் நின்று கொண்டு, ஒன்றையொன்று பார்த்து, "அழகான வீடு! இல்லையா?" என்று கேட்டுக் கொண்டன.

பகலெல்லாம் வெட்டவெளியில் போய் விளையாடித் திரிந்துவிட்டு இரவில் வீட்டில் வந்து அவை படுத்துக் கொண்டன.

அம்மாச் சிட்டும் அதன் குஞ்சுகளும் அந்த மண் வீட்டில் இன்பமாக இருந்து வந்தன.