பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்

35


சிறப்பான வாழ்வுக்கு உடற்பயிற்சிகள் என்ன செய்கின்றன என்ற கேள்விக்கு, இந்தப் பதிலைப் படியுங்கள் முக்கியமான மூன்று குறிப்புக்கள்தான் பயிற்சியின் பெருமை கூறும் உன்னதமான சிறப்புக்கள் என்று சுருக்கமாக விளக்கியிருக்கிறோம்.

1.உடல் எடையை சம அளவில் வைத்துக் காக்கிறது.

உண்ணும் உணவின் கலோரி அளவைப் பொறுத்தே உடல் சீராக இருக்கிறது. கலோரி அளவை அதிகப்படுத்தி தின்று கொண்டே இருந்தால், கடைசியில் கொழுப்புச் சக்தி சேர்ந்து கொண்டே வந்து, உடல் குண்டாகிப் போகின்றது.

அவ்வாறு குண்டாகிப் போன கொழுப்பு உடலை, ஒரே நாளில் குடைந்தெடுத்தோ, கடைந்தெடுத்தோ கழித்து விட முடியாது. அகற்றி விடவும் முடியாது.

அதற்கான ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தான். நடக்கலாம் என்பார்கள். ஒரு மணிநேரத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடப்பது போன்றவை எப்போதும் முடியக்கூடிய காரியமல்ல.

ஆனால் வீட்டிலிருந்தபடியே தினம் 10 நிமிடம் கட்டுப்பாடான உணவுப் பழக்கத்துடன், கடுமையாக அல்லாமல், கடமையாக உடல் வியர்த்து விடும்படி செய்கிற பயிற்சிகள், என்றும் உடலை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆகவே, தேவையான உடல் எடையை தேகத்திற்குத் தந்து திறம்பட இயக்க, பலம் பெற, பயிற்சிகள் எல்லாம் பழகிய நண்பனைப் போல உதவுகின்றன.