பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கடுமையான வேலை ஒன்றை செய்கிறபோது, உடனே அசதி, ஆயாசம், அலுப்பு எல்லாம் வருவது இயற்கை. அப்படிப்பட்ட அவதி நிலை சற்று நேரத்திற்கெல்லாம் மாறி, மறைந்து போய் மீண்டும் வேலை செய்யத் தூண்டுகிற மனநிலை இப்போது ஏற்பட்டிருக்கிறதா?

அப்படி உடல் உழைப்புக்கு, உடல் ரீதியில் தயாராகின்ற திருப்தியும் மன உணர்வும் கிடைத்திருக்கிறதா?

தும்மல், இருமல், மூக்கடைப்பு வந்தாலும், உடனடி நிவாரணம் ஏற்பட்டு தொந்தரவுகளிலிருந்து தப்பி வெளிவரும் நேரத்தில் வேகம் ஏற்பட்டிருக்கிறதா?

நன்றாகப் பசிக்கிறது. இன்னும் கொஞ்சம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதா?

இன்று என்னவோ தெரியவில்லை. நான் ‘ஜம்’ என்று இருக்கிறேன். ஒரு புதிய தெம்பு வாழ்க்கையில் ஒரு புதிய பரிணாமம் புறப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது என்று உணர முடிகிறதா?

நிச்சயமாக, இந்த வித்தியாசமான விளைவுகள் எல்லாம், உடற் பயிற்சியால் உண்டான அதிசய மாற்றங்கள்தான். அற்புத ஏற்றங்கள்தான்.

9. இப்படிப்பட்ட இனிய மாறுதல்களை ஏற்படுத்தித்தரும் உடற்பயிற்சிகளை நீங்கள் செய்கிறபோது, எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

இதோ! இப்படித்தான்.

உங்களுக்குப் பிடித்தமான ஓர் இசையைக் கேட்பது போல. நீங்கள் விரும்புகிறவரின் நளினமான ஒரு நடனக் காட்சியைக் கண்டு களிப்பது போல;

நீங்கள் ஆர்வமுடன் ரசித்துச் சாப்பிடுகின்ற உணவை உண்பது போல;