பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

"ஏனடா சிவராமா? அக்காளே அடிச்சே?"

"அக்காள் என்னெ கிள்ளினா."

"நீ ஏம்மா அவனே கிள்ளினே?"

"அவன் என்னே திட்டினா."

"நீ ஏனடா அக்காளே திட்டினே?”

"அக்காள் என்னே மொட்டெ இன்னா."

இப்படி போய்க்கொண்டிருந்தால் வியாஜ்யம் முடியாதென்று, அத்துடன் நிறுத்திக்கொண்டு "சரோஜி! நீ தம்பியை மொட்டை இன்னு சொல்லக்கூடாது" என்று தீர்மானம் சொல்லி அவர்களைக் கீழே அனுப்பினேன். பாதி படி இறங்கிப் போகுமுன் மறுபடி இரண்டு பெயரும் மெத்தைக்கு வந்தார்கள். சிவராமன், 'அக்காள் என்னைத் திட்டுகிறாள்' என்று வியாஜ்யம் கொண்டுவந்தான்.

சரோஜி "நான் திட்டவே இல்லே தாதா! என்னா திட்டினே இன்னு கேளுங்கள்” என்றாள்.

"ஏண்டாப்பா? என்னவென்று திட்டினாள் அக்காள்?"

"சிவராமன் திட்டினது எனக்கு கேக்கலே கண்ணு என்னமோ மொண மொண இன்னு திட்டிகினு போனாள்" என்றான்.

அதன்பேரில், “சரோஜினி மொண மொண இன்னு சொல்லக் கூடாது" என்று சொல்லி சமாதானம் செய்து அனுப்பினேன். நான்கு படி இறங்கியதும் மறுபடி சிவராமன் என்னிடம் அழுது கொண்டு வந்தான். இப்பொழுது என்னடாப்பா சமாசாரம் என்று விசாரிக்க, "அக்காள், மனசுக்குள்ளேயே என்னே திட்டறாள்' என்றான். இந்த வியாஜ்யத்தை யார் தீர்மானம் பண்ணுவது! நான் ஜட்ஜாக இருந்தபொழுது அநேக வியாஜ்யங்களில் உண்மையைக் கண்டுபிடித்ததாகப் புகழப்பட்டிருக்கிறேன். இந்த வியாஜ்யத்தின் உண்மையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பேரில் அவர்களிருவரையும் கூப்பிட்டு, 'இன்றைக்கெல்லாம் நீங்கள் சமாதானமாக இருந்தால் உங்களிருவருக்கும் உடையவர் உற்சவத்தில், தேர் தினம் நம்முடைய தெருவில் சாமி வரும்பொழுது, சடைபொம்மை வாங்கிக் கொடுக்கிறேன்' என்று சொல்லி கீழே அனுப்பினேன். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்களிருவருக்கும் முக்கிய விளையாட்டு எப்பொழுதும் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதே.