பக்கம்:பல்சுவை விருந்து.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பல்சுவை விருந்து

கருதிவிட்டனர். அதனால் தமிழுக்குத் தர வேண்டிய உரிமை யான சிறப்பைத் தர மறுத்தனர். அது வடமொழிக்கே ஆதி முதல் கடன்பட்டது என்ற எண்ணத்தோடு தாழ்வாக நோக்கத் தொடங் கினர். எ.டு. இலக்கணக் கொத்து என்னும் நூலை வரைந்த சுவாமிநாத தேசிகர் என்னும் வட மொழி அறிஞர் இதை நிறுவுவதற்கு மேற்கொண்ட போலி முயற்சியே இதற்குச் சான்றாக அமைகின்றது.

தனித்தமிழ் இயக்கம்: தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி களில் கலந்தமை போல் தமிழிலும் வடமொழிச் சொற்களையும் எழுத்துகளையும் மிகுதியாகக் கலக்கும் முயற்சி ஒன்று பல நூற்றாண்டுகட்கு முன்பே தோன்றியது. இது மணிப்பிரவாள நடையாகும். வடமொழி படித்த அறிஞர்களும் வைணவ அறிஞர்களும் இந்நடையை மிகுதியாகக் கையாண்டனர். கிரந்த எழுத்தை உண்டாக்கி அதனை மிகுதியாகப் பயன்படுத்தினர். இயல்பாகவே இலக்கிய வளம் பெற்றுச் சொல்வளம் நிரம்பிப் பண்பட்ட தமிழ் மொழியில் அந்த முயற்சி வெற்றிபெற வில்லை. இந்தப் போலி முயற்சியை வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், மறைமலையடிகள், திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் முதலான புலவர்கள் தோன்றி தமிழுக்கு உள்ள இலக்கிய வளத்தை எடுத்துக்காட்டின பிறகே இந்தப் போலி முயற்சி அடங்கியது. இந்த மொழி வரலாற்றில் வட மொழியும் தமிழும் சிவபெருமானின் இரு கண்கள் என்று கருதி வந்த பண்டையோர் கருத்தும் இடம் பெறலாம். ஒரு காலத்தில் மனிதன் தன் பெரும்படையோடு தேவனை எதிர்த்தான் என்றும், அதனால் தேவன் சினந்து அவர்கள் ஒற்றுமையைக் குலைக்க ஒருவர் பேசுவது மற்றவருக்கு விளங்காத பல மொழிகள் பேசுமாறு சாபம் போட்டார் என்றும், இதனால்தான் உலகில் பல மொழிகள் நின்று நிலவுகின்றன என்றும் விவிலியத்தில் ஒரு குறிப்பு உண்டு. இத்தகைய குறிப்பும் இந்த மொழி வரலாற்று நூலில் இடம் பெற்றால் நூல் சுவையுடன் அமையும். எந்தத் துறையாயினும் மூடப் பழக்கம் மனிதனின் உடன்பிறந்த சொத்தாக உள்ளது என்ற உண்மையும் தெளிவாகப் புலனாகும்.