பக்கம்:பல்சுவை விருந்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பல்சுவை விருந்து

இரண்டாவது முதல் அடுக்கிற்கு அடுத்து உள்ள மேற்பகுதி அடுக்கு வளி மண்டலம் (Stratosphere) எனப்படும். இஃது அடிவளி மண்டலத்தின் உச்சியில் தொடங்கி சுமார் இருபது மைல் உயரம் வரை பரவி நிற்பது. இப்பகுதியிலும் தொடர்ந்தாற் போல் கடுங் காற்றுகள் வீசிய வண்ணம் உள்ளது. இதன் அடிப் பகுதியில் வேகமாகப் பாய்ந்து செல்லும் இரண்டு காற்றாறுகள் இப்பூமண்டலத்தைச் சுற்றி ஓடிய வண்ணம் உள்ளன.

மூன்றாவது: வளி மண்டலத்தின் மூன்றாவது அடுக்கு வேதியியல் மண்டலம் (Chemisphere) ஆகும். இதன் ஒரு பகுதி அடுக்கு வளி மண்டலத்தின் மீது மடிந்து கிடக்கின்றது. இந்த மெல்லிய அடுக்கில் விண்வெளியினின்று இறங்கும் காற்றின் மூலக் கூறுகளில் பெருத்த வேதியியல் மாறுபாடுகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக இது வேதியியல் மண்டலம் என வழங்கப் பெற்றது. இம்மண்டலம் அடுக்கு வளி மண்டலத்தின் மேல் மட்டத்திலிருந்து சுமார் 48 கி.மீ. வரை பரவியுள்ளது. இம் மண்டலத்தின் அடி மட்டத்திலிருந்து சுமார் 14 கி.மீ. உயரம் வரை ஓஸோன் (Ozone) என்ற உயிர்க் காற்று பரவியுள்ளது. ஆகவே இந்தப் பகுதி ஓஸோன் மண்டலம் (Ozonosphere) என்று வழங்கப் பெறுகின்றது. கதிரவன் காலும் புற ஊதாக் கதிர்களும் உயிரியமும் (Oxygen) சேர்ந்து மாற்றம் அடைந்து ஒஸோன் அடுக்கு ஏற்படுகின்றது. இந்த அடுக்குதான் புறஊதாக் கதிர்கள் பூமியின்மீது விழாதவாறு பாதுகாக்கின்றது.

நான்காவது: வளி மண்டலத்தின் நான்காவது அடுக்கு அயனிமண்டலம் (lonosphere) என்பது. இது வேதியியல் மண்டலத்திற்கு மேல் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை இன்னும் ஒருவரும் அறுதியிடவில்லை. இது முதல் 320 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளதாக அறிவியலறிஞர்கள் ஓரளவு அறிந் துள்ளனர். எஞ்சியுள்ள பகுதி இன்னும் விளங்காப் புதிராகவே உள்ளது. இந்த அடுக்கு மின்சாரத் தன்மை கொண்டது. இது காந்தப் புயல்களின் இருப்பிடமுமாகும். இவை தாம் வானொலி களைத் தாக்கி அவற்றை இயங்கா நிலைக்குக் கொணர்கின்றன.