பக்கம்:பல்சுவை விருந்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பயணம் 59

வேகமும் அதிகரிக்கும். மேலுறை எவ்வளவு இலேசாகவும் பொறியமைப்புகளை எவ்வளவு சிறியவைகளாகவும் அமைத்த போதிலும் பொருண்மை விகிதத்தை 7க்கு மேல் அதிகப்படுத்த முடியாது என்று கண்டுள்ளனர் இராக்கெட்டுப் பொறிஞர்கள்.

இராக்கெட்டின் இயக்கம்: இராக்கெட்டு மூன்றடுக்கின்றி ஒன்றாக அமைந்திருந்தால் அதன் மேலுள்ள விண்கலத்தைத் தன்னிடமிருந்து கழற்றி விண்வெளியில் இயக்கும் வரையில் அதனை வீணாகச் சுமந்து செல்ல வேண்டி நேரிடும். மூன்றடுக்கு இராக்கெட்டில் அடியிலுள்ள முதல் அடுக்கு முதலில் இயங்கத் தொடங்கும். அதிலுள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்ததும் அது பயனற்றதாகி விடுகின்றது. வீணாக ஒரு பளுவைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே அது கழற்றி நழுவ விடப் பெறலாம். இதனால் எஞ்சியுள்ள இராக்கெட்டு அமைப்பின் எடை மிகவும் குறைந்து விடுகின்றது. இந்த நிலையில் அது மணிக்கு 4,000 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து 48 கி.மீ. உயரத்தை எட்டுகின்றது.

முதல் அடுக்கு இராக்கெட்டு கழன்ற பிறகு இராக்கெட்டு அமைப்பின் எடை குறைவதால் அது மிகுந்த வேகத்தைப் பெறு கின்றது. இரண்டாவது அடுக்கு இராக்கெட்டு செயற்படத் தொடங்கியதும், இராக்கெட்டின் அமைப்பு பன்மடங்கு வேகத்தை அடைகின்றது. அதிலுள்ள எரிபொருள் கலவை முற்றிலும் தீர்ந்த பிறகு அதுவும் கழன்று நழுவி விழுந்து விடுகின்றது. கிட்டத்தட்ட 160 கி.மீ. உயரத்தில் அதன் வேகம் மணிக்கு 19,200 கி.மீ. ஆகி விடுகின்றது. இந்த நிலையில் காற்றை துளைத்துக் கொண்டு விரைவதற்காக அமைக்கப் பெற்ற மூக்குப் பகுதியும், காற்றே இல்லாத உயரத்தில் பயனற்றுப் போவதால், கழன்று விழுந்து அமைப்பின் எடையைக் குறைத்து இராக்கெட்டு அமைப்பின் எஞ்சிய பகுதியின் வேகத்தை அதிகரிப்பதற்கு வகை செய்கின்றது. இந்த அதிவேகமும் எடை குறைவும் மூன்றாவது நிலை இராக்கெட்டினை மேலும் பன்மடங்கு வேகத்தை அடையச் செய்கின்றது.