பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

103



நூற்பவர், ஆடை நெய்பவர், ஆடைவிற்பவர், பனஞ்சாறு எடுப்பவர், வலைஞர் முதலிய தொழிலாளர் தத்தமது தொழிலுக்கே ஏற்றவாறு வரி செலுத்திவந்தனர். அரசாங்கத்தில் ஒர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு ஒலை போக்க வசதி இருந்தது போலும்! அவ்வசதிக்காகச் செலுத்தப்பட்ட வரி ‘திருமுகக் காணம்’ என்பது. கத்தி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் ‘கத்திக் காணம்’ என்ற ஒருவகை வரியைச் செலுத்தி வந்தனர். பறையடிப்பவர் ‘நெடும் பறை’ என்ற ஒருவகை வரி செலுத்தினர். மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட தண்டம் ‘மன்றுபாடு’ எனப்பட்டது. இவை அனைத்தையும் நோக்கப் பல்லவ அரசாங்கம் குடிமக்களிடமிருந்து பல வழிகளிலும் வரியைப் பெற்றுவந்தது என அறியலாம்.

அரசாங்கப் பண்டாரம்

இதன் தலைவன் நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் உடையவனாக அமர்த்தப்பட்டான். பண்டாரத்திலிருந்து பொருள்கொடுக்க ஆனையிடுபவன் ‘கொடுக்கப்பிள்ளை’ எனப்பட்டான். அரசாங்கப் பண்டாரம் ‘மாணிக்கப் பண்டாரம்’ என்றும் பெயர் பெற்றிருந்தது.

அளவைகள்

நாழி, உறி, உழக்கு, பிடி, ஜோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலியன முகத்தல் அளவைக்கருவிகள். நிவர்த்தனம், பட்டிகா (பட்டி), பாடகம், குழி, வேலி என்பன நீட்டல் அளவைப் பெயர்களாம். கழஞ்சு, மஞ்சாடி, குன்றிமணி என்பன நிறுத்தல் அளவைப் பெயர்கள்.