பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 பல்லவப் பேரரசர்

டாக்டர் மா.இராசமாணிக்கனார்



நீர்ப்பாசன வசதிகள்

பல்லவ அரசர் ‘காடு வெட்டிகள்’ ஆதலால், நீர்ப்பாசன வசதிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தனர். இராஜ தடாகம், மஹேந்திர தடாகம் (மகேந்திரவாடி ஏரி), சித்ரமேக தடாகம் (மாமண்டூர் ஏரி) முதலிய பெயர்களைக் காண்கையில் இவ்வுண்மை விளங்கும். தொண்டை நாடு முழுவதும் பெரிய ஏரிகள் நிரம்பிய இடமாகும். ஏரிகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் நீரைக் கொண்டு செல்ல வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருந்தன. பெரும்பிடுகு வாய்க்கால், வைரமேகன் வாய்க்கால் என்ற பெயர்களைக் காண்க. இந்த ஏரிகளையும் கால்வாய்களையும் கவனிக்க ஏரி வாரியப் பெருமக்கள் ஊர்தோறும் இருந்துவந்தனர்.

நாணயங்கள்

பல்லவர் நாணயங்கள் செம்பு, வெள்ளி, பொன் இவற்றால் ஆனவை. மஹேந்திரன் காலத்தில் பொற்காசுகள் வழக்கில் இருந்தன; நரசிம்மன் காலத்திலும் அங்ஙனமே. அவற்றுள் பழங்காசு என்பது வாசி (வட்டம்) இன்றிச் செல்லவல்லது. புதுக்காசுகள் வாசியோடு செல்லுபடி ஆயின. நரசிம்மவர்மன் காலத்தவரான திருஞானசம்பந்தரது,

“வாசி திரவே காசு நல்குவீர்”

என்னும் திருவிழிமிழலைத் திருப்பதிகம் இவ்வுண்மையை உணர்த்தவல்லது.

***