பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

9


எருமைக் கடாவிற்கும் கூறப்படும். இப்பொழுது தொண்டை நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ‘போதராஜாக் கோவில்கள்’ உண்டு. இவை பல்லவர்கால வழக்கு என்பதை அறியக்கூடும். இக்கோவில்களை, அரசமரபினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் (‘நாயகர்’ மரபினர்) போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர்-தமிழ் நாட்டினர் என்று கொள்வதே தகுதி என்னலாம்” என்பது வேறொருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[1]


பல்லவர் - ஆரியரே

“பாரசீகத்திலிருந்து இந்தியாமீது படையெடுத்து வந்த ஆரியர் பார்த்தியர், பஹ்லவர், க்ஷத்ரபர், சாகர் என்னும் பல பெயர்களை உடையவர். அவர்கள் சிந்து மாகாணம், கூர்ச்சரம், கங்கைச் சமவெளிகளில் பரவினர். ருத்ரதாமன் என்ற க்ஷத்ரய அரசனிடம் சுவிசாகன் என்ற பஹ்லவன் அமைச்சனாக இருந்தான். கி.பி. முதல் நூற்றாண்டில் குஷானர் இந்தியாமீது படையெடுத்தனர். அதனால் வட இந்தியாவில் இருந்த ஷத்ரபர் டெக்கான் பீடபூமி நோக்கி வரலாயினர். அப்பொழுது டெக்கானில் சாதவர்ஹனர் மரபினரான தெலுங்கர் பேரரசு செலுத்திவந்தனர். அதனால் சாதவாஹனர்க்கும் க்ஷத்ரபர்க்கும் போர் நடந்தது. க்ஷத்ரபர் செளராஷ்டிரம், பம்பாய் மாகாணத்தின் வடபகுதி, ஐதராபாத் சமஸ்தானத்தின் வடபகுதி ஆகியவற்றைக் கைப்பற்றி ஆளலாயினர். இதனால் சாதவாஹனப் பேரரசு எல்லையிற் சுருங்கிக் கோதாவரி, கிருஷ்ணை ஜில்லாக்கள் அளவிற்கு வந்துவிட்டது. இந்நிலைமை ஏறத்தாழக் கி.பி. 200-ல் உண்டானதெனலாம். அதன் பின்னரே


  1. C.M.R. Chettiar in ‘Pallavar Varalaru’ by M. Rajamanikkam.