பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பல்லவப் பேரரசர்



சுற்றுப்புற நாடுகள்

இக்காலப் பல்லவர் ஓயாத போர்களில் ஈடுபட்டனர். அவர்கள் யாருடன் இங்ஙனம் ஒய்வின்றிப் போரிட்டனர்? பல்லவ நாட்டைச் சுற்றியிருந்த பல நாட்டரசருடன் போர் செய்தனர். அவ்வாறு பல்லவ நாட்டைச் சுற்றியிருந்த நாடுகள் எவை?

சாலங்காயனர்: கோதாவரி, கிருஷ்ணை ஆறுகட்கு இடையில் உள்ள நாட்டின் பெயர் வேங்கை (வேங்கி) நாடு என்பது. அதனைச் சாலங்காயனர் என்ற அரச மரபினர் (கி.பி. 320-600) ஆண்டுவந்தனர்.

இக்ஷ்வாகர்: குண்டூர், கிருஷ்ணா ஜில்லாக்களை இக்ஷ்வாகர் என்பவர் ஆண்டுவந்தனர்; பிறகு அதனைப் பல்லவர் கைப்பற்றின. பின்னர் அதனை ஆனந்தர் என்ற மரபினர் கைப்பற்றி (கி.பி.500-600) ஆண்டனர்.

கதம்பர்: கிருஷ்ணை, துங்கபத்திரை ஆறுகட்கு இடைப்பட்ட நாடு கதம்ப நாடு ஆகும். அதன் தலைநகரம் வனவாசி என்பது. இம்மரபின் முதல் அரசன் மயூரசர்மன் என்ற மறையவன். அவன் பல்லவர்க்குக் கொடிய பகைவன். அவன் காஞ்சியில் இருந்த வடமொழிக் கல்லூரிக்குப் படிக்கச் சென்று, பல்லவன்பால் வெறுப்புற்று, இந்நாட்டைத் தோற்றுவித்தான்; பல்லவர்க்குப் பல தொல்லைகளை விளைவித்தான். அவன் மரபினர் பல்லவரைப் பகைவராகக் கருதியே போரிட்டு வந்தனர். இக்கதம்பர் ஆட்சி ஏறக்குறைய இரண்டரை (கி.பி.350-600) நூற்றாண்டுகள் இருந்தது என்னலாம்.

கங்கர்: இவர்கள் காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டுவந்தவர். இவர்கள் பல்லவர்க்கு நண்பராகவே இருந்து வந்தனர்.