பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

17



தமிழ் அரசர்

பல்லவர் தொண்டை நாட்டைக் கைப்பற்றிய பொழுது திருப்பதி, காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த களப்பிரர் மரபினர் தெற்கு நோக்கிச் சென்று சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளலாயினர்; அங்கு நிலையாக இருந்த சோழ, பாண்டியர் இக்களப்பிரருடன் போரிட்டனர். இவரனைவரும் சேர்ந்தும் சேராமலும் இடைக்காலப் பல்லவர்க்குத் தொல்லை கொடுத்து வந்தனர்.

பல்லவர் - தமிழர் போர்

இடைக்காலப் பல்லவ அரசர் பலர் காஞ்சியில் இருந்து பட்டயங்கள் விடுக்கவில்லை; அவர்கள் நெல்லூர், கடப்பை ஜில்லாக்களில் இருந்தே காலங்கழித்தனர். அவர்களில் இரண்டாம் ஸ்கந்தவர்மன் காஞ்சியைக் கைப்பற்றியதாகக் கூறிக்கொள்கிறான். ஆனால், அவனுக்குப்பின் காஞ்சி மீட்டும் பல்லவர் கையிலிருந்து நழுவி விட்டது. அதனைப் பின் சிம்மவிஷ்ணு என்பவன் ஏறத்தாழக் கி.பி.575-இல் மீளவும் கைப்பற்றினான். இக்குறிப்புகளை நோக்கக் காஞ்சி உள்ளிட்ட தொண்டை நாடு இந்த இடைக்காலப் பல்லவர் காலத்தில், தெற்கே இருந்த களப்பிரர்.சோழர் கைகட்கு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது என்னலாம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தவர்மன் என்பவன் கடல்போன்ற சோழர் படையுடன் போரிட்டான் என்று பல்லவர் பட்டயம் பகர்கின்றது. சிம்மவிஷ்ணு சோழர், களப்பிரர், பாண்டியர் இவர்களுடன் போர் செய்தான் என்று பல்லவர் பட்டயம் சான்று பகர்கின்றது. இவற்றால், தெற்கே தமிழரசர் பல்லவர்க்கு ஒயாத்தொல்லைகள் கொடுத்து வந்தனர் என்பதை அறியலாம்.