பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

25



வடமொழியாளன், “ஐயனே, வடக்கே ஆரியநாட்டு அனந்தபுரத்தில் கெளசிக மரபில் நாராயணசாமி என்று ஒருவர் இருந்தார். அவருக்குத் தாமோதரர் என்ற புத்திரர் பிறந்தார். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர் பெற்றார். அவர் கீழைச்சாளுக்கிய நாட்டு அரசனான விஷ்ணுவர்த்தனனுக்கு நண்பரானார்; ஒருநாள் அவனுடன் காடு சென்றார். அரசன் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைத் தின்றான்; தன்னுடன் வந்த புலவரையும் தூண்டித் தின்னச் செய்தான். புலவர் அப்பாபத்தைப் போக்கப் பல இடங்கட்கு யாத்திரை சென்றார்; இறுதியில் துர்விநீதன் அவையை அடைந்து அங்கு இருந்து வருகின்றார். அவர் பாடிய பாடலையே நான் தங்கள்முன் பாடினேன்” என்றான்.

காஞ்சியில் பாரவி

சிம்மவிஷ்ணு பாரவியைத்தன் அவையில் வைத்திருக்க விரும்பினான்; அதனால் துர்விநிதனுக்குப் பார்வியைத் தன்னிடம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தான். பாரவியும் காஞ்சியை அடைந்தார்; பல்லவன் அவையை அலங்கரித்தார்: அர்ச்சுனன் தவம் செய்த பொழுது சிவபிரான் வேடவடிவிற் சென்று அவனுடன் பொய்யாகப் போரிட்டு அவனுக்குக் காட்சியளித்த வரலாற்றை ஒரு நூலாக வடமொழியிற் பாடினார். அதன் பெயர் ‘கிராதார்ச்சுனீயம்’ என்பது.

மஹேந்திரவர்மன்

சிம்மவிஷ்ணு மகனானமஹேந்திரவர்மன் இளமைப் பருவத்தில் காஞ்சியில் இருந்த சிறந்த வடமொழிப் புலவர்களிடம் கல்வி கற்றான்; பாரவி காஞ்சிக்கு வந்த