பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பல்லவப் பேரரசர்



பிறகு அவரிடமும் சில நூல்களைப் படித்திருக்கலாம். இவன் வடமொழியில் நல்ல புலமை பெற்றிருந்தான்; தமிழிலும் ஒரளவு பயிற்சி பெற்றிருந்தான் என்று கூறலாம். இவன் தந்தையுடன் இருந்து பெருநாட்டின் அரசியலைக் கவனித்து வந்ததால், இளவரசனாக இருந்த பொழுதே அரசியல் அறிவு சிறக்கப் பெற்றிருந்தான். இவனது தந்தை ஏறத்தாழ கி.பி. 615 வரை அரசனாக இருந்தான் என்பதால், இவனது ஆட்சி ஏறக்குறைய கி.பி. 615இல் தொடங்கி 635இல் முடிவுற்றிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். இவன் பட்டம் பெறும்பொழுது ஏறத்தாழ முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதுடையவனாக இருந்தான் என்று சொல்லலாம்.

பட்டப் பெயர்கள்

இவனுடைய விருதுப் பெயர்கள் பலவாகும். அவை தமிழிலும் தெலுங்கிலும் வடமொழியிலும் இருந்தன. அவற்றுள் சில குணபரன், விசித்திரசித்தன்,[1] சேத்தகாரி,[2] அவனிபாஜனன், லளிதாங்குரன், புருஷோத்தமன், சத்தியசந்தன், நரேந்திரன், போத்த்ரையன், சத்ருமல்லன், பகாப்பிடுகு,[3] நயபரன், விக்கிரமன், கலகப்பிரியன், மத்தவிலாசன், அநித்யராகன்,[4] சங்கீர்ண ஜாதி,[5] நரவாஹனன், உதாரசித்தன், பிரகிருதிப்பிரியன், அலுப்தகாமன் என்பனவாகும்.

பேரரசு

இவனுக்குத் தெலுங்கில் பல விருதுப்பெயர்கள் இருத்தலும், குண்டுர் ஜில்லாவில் இவனது கல்வெட்டு


  1. சிற்பஓவியக் கலைஞன்.
  2. கோவில்கள் அமைப்பவன்.
  3. பகைவர் மீது இடிபோலப் பாய்பவன்.
  4. நடன - இசைக்கலைகளில் அறிஞன்.
  5. ‘சங்கீர்ணம்’ என்னும் தாளவகையைப் புதியதாகக் கண்டுபிடித்தவன்.