பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

27



காணப்படுதலையும் நோக்க, இவனது பேரரசு வடக்கே கிருஷ்ணையாறுவரை பரவி இருந்தது என்பதறியலாம். நாரத்தாமலை, குடுமியான் மலை, திருமெய்யம் முதலிய புதுக்கோட்டையைச் சார்ந்த மலைகளில் இவனுடைய கல்வெட்டுகள் இருத்தலால், தெற்கே புதுக்கோட்டைச் சீமை முடிய இவனது ஆட்சி சென்றிருந்தது என்பது தெரிகிறது. எனவே, பல்லவப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே புதுக்கோட்டைச் சீமை முடிய இருந்தது என்னலாம்.

குடும்பம்

இவனுக்கு மனைவியர் இருவர் என்பது மஹாபலிபுரத்து ஆதிவராகர் கோவில் உருவச்சிலைகள் கொண்டு கூறலாம். இவன் செல்வமைந்தன் நரசிம்மவர்மன் என்பவன்.


4. போர்ச் செயல்கள்
சுற்றுப்புற நாடுகள்

மேலைச் சாளுக்கியர்

சிம்மவிஷ்ணு பல்லவ அரசனாக இருக்கையில், கி.பி. 610-இல் இரண்டாம் புலிகேசி என்பவன் சாளுக்கியப் பேரரசன் ஆனான். அவன் தன் பெருநாட்டிற்குத் தெற்கே இருந்த கதம்பர், கங்கர் என்போரையும் கிழக்கே இருந்த சாலங்காயனரையும் வென்றான்; கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கைநாட்டை வென்று, அங்குத் தன் தம்பியான விஷ்ணுவர்த்தனனை