பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பல்லவப் பேரரசர்


மகள் வயிற்றுப் பெயரனைச் சாளுக்கிய அரசு கட்டிலில் அமர்த்தினான்” என்று குறிக்கின்றது. இதனாலும் முன்சொன்ன சாளுக்கியின் நடத்திய போராட்டத்தாலும் மஹேந்திரன் முயற்சி பலிக்கவில்லை. என்பது தெரிகிறது; மஹேந்திரனைக் கங்கனும் சாளுக்கியனும் எதிர்த்தனர் என்பதும், அவன் இருவரையும் சமாளித்துத் துரத்தி அடித்தான் என்பதும் அறியக் கிடக்கின்றன.


5. சமய மாற்றம்

தமிழகத்தில் சமயநிலை

ஏறத்தாழச் சங்க காலத்தின் இறுதியாகிய கி.பி. 400க்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் பல சமயங்கள் இருந்தன. அவை சைவ சமயம், வைணவ சமயம், பெளத்த சமயம், சமண சமயம் முதலியனவாகும். அவை ஒன்றோடு ஒன்று போரிடாது சமரசமாகவே வாழ்ந்து வந்தன.

சங்க காலத்திற்குப் பிறகு சோழ - பாண்டிய நாடுகள் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் சமணம் தலை தூக்கியது. பாண்டிய நாடாண்ட களப்பிரர் சமணத்தைப் போற்றி வளர்த்தனர்; வைதிக நெறியையும் சைவத்தையும் வளரவிடவில்லை; ஒரு பிராமணனுக்கு விடப்பட்ட - பிரமதேய உரிமையைப் பறிமுதல் செய்தனர் என்று வேள்விக்குடிப்பட்டயம் விளம்புகிறது. மூர்த்திநாயனார் என்பவர்க்கு, சோமசுந்தர்க் கடவுள் கோவிலுக்கு நாளும் சந்தனச்சாந்து கொடுக்கச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தனர் என்று பெரிய புராணம் புகல்கின்றது. பாண்டிய நாட்டில் உள்ள மலைகளில்