பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

33



சமண முனிவர்கள் வாழ்ந்துவந்தார்கள். சமணப் புலவர் பலர், மதுரையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஒரு சங்கத்தைக் கூட்டினர் எனின், பாண்டிய நாட்டில் சமணம் நன்கு பரவி இருந்தது என்பதை அறியலாம்.

சமண மடம்

சோழ நாட்டிலும் திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் சமணர் பரவி இருந்தனர்; தொண்டை நாட்டில் வெடால், சிற்றாமூர், கூடலூர், திருப்பாதிரிப்புலியூர், காஞ்சி முதலிய இடங்களில் பரவி வாழ்ந்தனர். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமண மடம் ஒன்று தென்னிந்தியாவிற் புகழ்பெற்று விளங்கியது. அதனில் புகழ்பெற்ற சிம்மசூரி, சர்வநந்தி என்ற திகம்பர சமணப் பேரறிஞர் வடமொழியிலும் பிராக்ருத மொழியிலும் வல்லுநராய் விளங்கினர்; பிராக்ருத மொழியில் இருந்த சமண நூல்களை வடமொழியில் பெயர்த்தெழுதினர். காஞ்சி வடமொழிக் கல்லூரி வைதிகர்க்குச்சிறப்புச் செய்தவாறு, திருப்பாதிரிப்புலியூர் மடம் சமணர்க்குச் சிறப்பளித்தது. ‘லோகவிபாகம்’ என்ற சமண நூல் இந்த மடத்தில் செய்யப்பட்டது. அப்பொழுது சிம்மவர்மன் என்ற இடைக்காலப் பல்லவன் அரசனாக இருந்தான் என்று அந்த நூலின் முகவுரையிற் கண்டுள்ளது. மஹேந்திரவர்மன் தான் இந்த மடத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தான். இவ்ன் தன் ஆட்சியின் முற்பகுதியில் சமணப் பற்றுடையவனாக இருந்தவன்.