பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பல்லவப் பேரரசர்



சமண சமயமே பல்லவ நாட்டில் மிக்க செல்வாக்குப் பெற்று விளங்கியது. ஏனைய சமயங்கள் பெயரளவில் இருந்து வந்தன.

சூலை நோய்

இந்நிலையில் திடீரென்று தருமசேனர்க்குக் கொடிய வயிற்று வலி உண்டானது. அதன் பெயர் சூலைநோய் என்பது. வயிற்று எரிச்சல், வயிறு உளைதல், புளித்த ஏப்பம் வருதல், மயக்கம் உண்டாதல், குடரை முறுக்கல் முதலிய தொல்லைகளை உண்டாக்குதல் அதன் இயல்பு. அக்கொடு நோயால் தருமசேனர் பெருந்துன்பப்பட்டார். சமண முனிவர்கள் மந்திரவலியால் அதனைப் போக்க முயன்றனர்; பின்னர் மருந்து வகையால் போக்க - முற்பட்டனர். அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை.

தமக்கையாரை அடைதல்

சூலைநோயின் கொடுமை மிகுதிப்பட்டது. தருமசேனர். யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது அவருக்கு மனத்தெளிவு ஏற்பட்டது; தமது நிலையைத் திருவதிகையில் சிவத்தொண்டு செய்துவந்த தமது தமக்கையாருக்குச் சொல்லி அனுப்ப விழைந்தார்; அவ்வண்ணமே செய்தார். தமக்கையார் ‘இதுவும் சிவனருள்’ என்று எண்ணித் தம்பியார் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தார். தருமசேனர் திகம்பர சமண கோலத்தைக் களைந்து வெள்ளையாடை உடுத்து, இரவில் சென்று, “நமது குலம் செய்த நற்றவத்தின் பயன் அனையீர், என் உடலை வருத்தும் கொடிய சூலைநோய்க்கு வருந்தி யான் உம்மைச் சரண் அடைந்தேன். நான் பிழைக்கும் வழியைக் காட்டி அருளுக” என்று வேண்டி, அவர் மலர்போன்ற பாதங்களிற் பணிந்தார்.