பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

37



மத மாற்றம்

அருள் நோக்கமுடைய அவ்வம்மையார் தம்பியாரை எழுப்பி, “அப்பனே திருவதிகைப் பெருமானைப் பாடவா; செல்வோம்; அவனே நினது கொடுநோயை நீக்கவல்லவன்” என்றார்; என்று, சிவபெருமானை நினைந்து திருநீற்றைத் தந்தார்:“நான் பிழைத்தேன்” என்று சொல்லிக்கொண்டு மருள்நீக்கியார் அதன்னைப் பெற்றுப் பெருமகிழ்ச்சியுடன் உடல் முழுவதும் பூசிக்கொண்டார். பிறகு இருவரும் திருக்கோவிலை அடைந்தனர்; பக்தியுடன் கோவிலை வலங்கொண்டனர். அப்பொழுது மருள்நீக்கியார் சிவபிரான்மீது பாடல்கள் பாடும் உணர்வு பெற்றார்; உணர்வு பெற்று, இறைவன்மீது கொண்ட பேரன்பினால் உள்ளம் உருக, “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்று தொடங்கி ஒரு பதிகம் பாடினார். அதனில், “நான் பிறந்தது முதல் உம் திருவடிகளையே எண்ணியிருந்தேன்; தமிழோடு இசைபாடல் மற்ந்தறியேன். என் வயிற்றை வருத்தும் கொடிய சூலைநோயைப் போக்கி, என் பிழையைப் பொறுத்து ஆட்கொண்டருள்வீர்” என்று வேண்டினார்.

“நாவுக்கரசன்”

அவ்வமயம், “நாவுக்கரசன்” என்னும் சொல் கோவிலிலிருந்து எழுந்தது. அதுமுதல் மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் எனப் பெயர் பெற்றார். இறைவன் திருவருளால் அவரது சூலைநோயும் மறைந்தது. அன்று முதல் திருநாவுக்கரசர் சிவ சின்னங்களை அணிந்து, திருவதிகைப் பெருமானைப் பேரன்புடன் பணிந்து திருப்பதிகங்களைப் பாடிவந்தார்; தினந்தோறும் திருக்கோவிலைச் சுத்தம் செய்யும் திருத்தொண்டில் ஈடுபட்டார்.