பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

39



ஒரு போர்வையாகக் கொண்டு, புகழ்பெற்ற நமது சமயத்தை அழித்தொழிக்கவே அவர் சென்றனர். போலும். அங்ஙனம் சென்றிருப்பின், அவர்கு ற்றமுடையவரே ஆவர். அவரை என்ன செய்யலாம்? கூறுக” என்றான். உடனே, கொலைபுரியா நிலைகொண்ட சமண முனிவர் அரசனை நோக்கி, “அரசே! தலைநெறியாகிய சமண சமயத்தை அழித்து, உன்னுடைய பழைமையான கட்டுப்பாட்டையும் ஆணையையும் அவமதித்த அறிவற்ற அத்தரும, சேனனைத் தக்கவாறு தண்டிப்பதே தக்கது” என்றனர். அரசன் அமைச்சரை அழைத்து, “நீவிர் திருவதிகைக்குச் சென்று இவர்கள் கூறும் தருமசேனன் என்பவனை இங்கு அழைத்து வருக” என்று பணித்தான்.

அரசரும் அமைச்சரும்

அமைச்சர் திருவதிகை அடைந்தனர் தருமசேனர் திருநாவுக்கரசராக இருந்ததைக் கண்டனர்; பணிவுடன் தம் அரசன் கட்டளையைத் தெரிவித்தனர். திருநாவுக்கரசர், “நாம் யார்? நும் அரசன் யாவன்? அவனிடம் நாம் வரவேண்டிய காரணம் என்ன? சிவனடியார்கள் அரசன் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லரே! நாம் அரசனைக் கண்டு. அஞ்சோம். நாம் ஈசனுடைய குடிகள் வேறெவர்க்கும் குடி அல்லோம்” என்று பலவாறு பேசினர்.அமைச்சர், அவர் காஞ்சிக்கு வராவிடில் தமக்குத் தண்டனை கிடைக்கும் என்பதை அறிவித்தனர். “அங்ஙனமாயின், வருவேன்,” எனக் கூறித் திருநாவுக்கரசர் பல்லவ அமைச்சருடன் காஞ்சி மாநகரை அடைந்தார்.