பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பல்லவப் பேரரசர்



பலவகைத் தண்டனைகள்[1]

நீற்றறையில் இடுதல்

“தருமசேனரைக் கொணர்ந்தோம்” என்று அமைச்சர் கூறக் கேட்ட அரசன், “அவனை யாது செய்யலாம்?” என்று சமண முனிவரைக் கேட்டான், அவர்கள், “அவனை நீற்றறையில் இடுக” என்றனர். அரசன் அருகில் இருந்தவரைப் பார்த்து,“அவ்வண்ணம் செய்க” என்றான். உடனே அரசனுடைய ஆட்கள் திருநாவுக்கரசரை நன்றாக எரிந்துகொண்டிருந்த நீற்றறையில் அடைத்துக் கதவை மூடிவிட்டனர்.

உள்ளே அடைப்பட்ட திருநாவுக்கரசர் சிவ பெருமான் திருவடிகளை நினைந்தவண்ணம் தம்மை மறந்து,

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றவே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்னும் திருப்பதிகம் பாடிக்கொண்டு இருந்தார். இவ்வாறு ஏழுநாள்கள் கழிந்தன. எட்டாம்நாள் அரசன் சமண முனிவரை அழைத்து, “நீற்றறையைத் திறந்து பாருங்கள்” என்றான். அவர்கள் திறந்து பார்த்து


  1. இங்ஙனம் தம் கொள்கைகட்கு மாறுபட்டாரைப் பலவாறு துன்புறுத்தல் பண்டை நாளில் உலகம் எங்கும் நடைபெற்றுவந்த நிகழ்ச்சியே ஆகும். சாக்ரடிஸ் விஷம் குடிக்கச் செய்யப்பட்டதும், இயேசுநாதர் சிலுவையில் அறையுண்டதும், மார்டின் லூதர் பல தண்டனைகளுக்கு ஆளானதும் காண்க. இந்நிகழ்ச்சிகள் வரலாற்று நிகழ்ச்சிகள்; அக்கால நிலைக்கேற்ப நடந்தவை. இந்நிகழ்ச்சிகள் பற்றி இக்காலத்தில் விவாதம் வேண்டுவதில்லை.