பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பல்லவப் பேரரசர்



சென்றது. அதன்மீதிருந்த பாகர் அதனைக் குத்தித் துன்புறுத்தித் திருநாவுக்கரசர் மீது ஏவ முயன்றனர். அந்த யானை சீற்றம் மிகுந்து, பாகரை இழுத்துக் கீழே தள்ளி மிதித்துக் கொன்று நகரத்தைக் கலக்கியது. இதனை உணர்ந்த அரசன் பெருந்துயர் கொண்டான்.

கல்லிற் கட்டிக் கடலிற் பாய்ச்சல்

யானைக்குத் தப்பிப்பிழைத்த சமண முனிவர் மஹேந்திரனை அடைந்தனர்; அடைந்து, “அக்கொடி யோனைக் கல்லிடைக் கட்டிக் கடலில் எறிதலே தக்கது” என்றனர். உடனே வேந்தன் ஆட்களை நோக்கி, “அவனைப் படகில் ஏற்றிச் சென்று கல்லிற்கட்டிக் கடலில் போட்டு விடுக” என்று ஆணையிட்டான். அவர்கள் அங்ஙனமே செய்து மீண்டார்கள்.

கடலில் வீழ்த்தப்பட்ட திருநாவுக்கரசர்,

“சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருத்தக் கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது கமச்சி வாயவே”

என்னும் திருப்பதிகம் பாடினார்

திருவருள் துணையால் கல் தெப்பமாக மிதந்தது. திருநாவுக்கரசர் அதன்மீது அமர்ந்து இறைவனைப். பாடிக்கொண்டே திருப்பாதிரிப்புலியூர்க் கரை ஓரமாக வந்து கரை[1] ஏறினார்; ஏறி, நேராகத் திருப்பாதிரிப்புலியூர்ச் சிவபெருமான் திருக்கோவிலை அடைந்தார்; அடைந்து தொழுது, “ஈன்றாளு மாயெனக் கெந்தையுமாய்” என்று தொடங்கும் திருப்பதிகத்தை உள்முருகப் பாடினார்.


  1. ‘கரை ஏற விட்ட குப்பம்’ என்பது பாதிரிப்புலியூரை அடுத்து - இருக்கின்றது.